மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறைவழிபாட்டிற்கே உரிய மாத மென்றே சொல்லலாம்.
பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதன் முன் எழுந்து ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவது திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவண்ணாமலையை தரிசிக்கும் போது பாடப் பெற்றது.
சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.
திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது 'எம்பாவாய்' என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும்.
மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும்.
இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும். இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது
திருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள்? ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர்.
மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப் பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெ ருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை.
திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.
திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளுக்கு ஒன்பது நாட்கள் முதல் நோன்பை ஆரம்பித்து பத்தாவது நாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள்.மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது.
மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வரும் நோன்பு என்பதனை பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
ஆர்.நடராஜன்
COMMENTS