மகாபாரதத்தில் வன பர்வதத்தில் உள்ள ஸ்கந்தப்பெருமானின் திருநாம ஸ்தோத்திரத்தில் "ரேவதீஸுத" (ரேவதியின் புதல்வன்) என்றொரு திருநாமம் குமரக்கடவுளுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஷஷ்டீப்ரியஸ்ச தர்மாத்மா
பவித்ரோ மாத்ரு வத்ஸல:
கந்யாபர்த்தா விபக்தஸ் ச
ஸ்வாஹேயோ ரேவதீஸுத:
பவித்ரோ மாத்ரு வத்ஸல:
கந்யாபர்த்தா விபக்தஸ் ச
ஸ்வாஹேயோ ரேவதீஸுத:
எதிர்வரும் 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை வைகாசி ரேவதி. இத்தகு ரேவதி நக்ஷத்திரம் வைகாசி மாதத்தில் சேரும் இனிய நாளில் தான் நல்லை கந்தவேளுக்கு மஹாகும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
வட இலங்கையில் உள்ள ஸ்தலங்களில் நல்லைக் குமரவேளின் பேராலயம் பெறும் முதன்மை தவிர்க்க இயலாது. தங்கவிமானம் கொண்ட இத்தலத்தில் காஞ்சி மா தல விருக்ஷமாக காணப்படுகிறது.
யாழ்ப்பாண அரசர் கால வரலாற்றோடு தொடர்பு படுத்தப்படும் இத்திருத்தலம் தொண்டைமண்டல முதலியார் மரபினரால் மிகச்சிறப்பாக பரிபாலனம் செய்யப்படுகிறது.
இரகுநாதமாப்பாண முதலியார் மற்றும் கிருஷ்ணையர் என்று ஸ்ரீ ராமர், கிருஷ்ணர் என்ற இரண்டு முக்கிய திருவவதாரப் பெயர்களை உடைய பெரியவர்கள் இணைந்ததன் பேறாக 1800களில் இன்றுள்ள இத்தலம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஸ்தலத்தில் சில தனித்துவமான அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் இத்தலத்தில் அண்மையில், சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
முதலியார் குல. சபாநாதன் அவர்கள் எழுதி 1971ல் தேவஸ்தானம் வெளியிட்ட 'நல்லூர் கந்தசுவாமி' நூலின் படி, இந்த கும்பாபிஷேகம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில், மூலஸ்தானம் கற்றளியாக அமைக்கப்பெற்று 1902ல் இந்த கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
மற்றைய ஆலயங்கள் போல குறித்த ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையான பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்யும் மரபு நல்லூரில் இல்லை. கோபுரங்கள், விமானம் ஆகியவற்றுக்கு தான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.
எனவே அந்த 1902 மஹா கும்பாபிஷேகம் நிகழ்ந்த நாளான வைகாசி ரேவதி நாளில் நல்லூர் கந்தவேளுக்கு மஹா (சஹஸ்ர) சங்காபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண வைபவமும் இடம்பெற்று வருகிறது.
மகத்துவம் மிக்க இந்நாளை ஒட்டி கோயில் வழமையை விட வாழை, தோரணங்களால் விசேஷமாக அலங்கரிக்கப்படுவதும், ஷண்முக நாதக் கடவுள் பூந்தண்டிகையில் திருவீதி எழுந்தருளி உலாக் காண்பதும் வழமை.
கயிற்றசிட்டிக்கந்தன், நீர்வை கதிர்காமக்கந்தன் ஆகிய வேறு சில முருகன் கோயில்களிலும் ரேவதி நாளே கும்பாபிஷேக நாளாக கொள்ளப்படுகின்றது.
இந்த நாளை தமிழகத்தில் அபிஷேக முதன்மையாக வருஷாபிஷேகம் அல்லது சம்வத்சராபிஷேகம் என்பர். நம் தேசத்தில் அன்று இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருவதை முதன்மையாகக் கொண்டு மணவாளக்கோலம் என்பர்.
ரேவதி சுதனான பெருமான் இத்திருநாளில் எங்கள் பாபங்களையும் குற்றங்களையும் மன்னித்து, எங்கள் துயரங்களையும், வலிகளையும் விலக்கி கருணையோடு காக்க பிரார்த்திப்போம். அவனன்றி எம்மைக் காக்க வேறு யார் உளர் ?
ஹேம மண்டித மந்திர நாயக
வம்ஸ விவர்த்தன தேவ பதே
காம பலப்ரத வல்லிமந: ப்ரிய
யோக ஸு வந்தித சக்தி பதே
நாம பராயண நல்லூர் நிவாஸக
ரகு குரு பூஜித ஹ்ருஷ்டமதே
ஜய ஜய ஹே சிவ ஷண்முக ஸுந்தர
சரவணபவ குஹ பாலயமாம்
வம்ஸ விவர்த்தன தேவ பதே
காம பலப்ரத வல்லிமந: ப்ரிய
யோக ஸு வந்தித சக்தி பதே
நாம பராயண நல்லூர் நிவாஸக
ரகு குரு பூஜித ஹ்ருஷ்டமதே
ஜய ஜய ஹே சிவ ஷண்முக ஸுந்தர
சரவணபவ குஹ பாலயமாம்
தங்கமயமான, (தங்க விமானமும், வாகனங்களும், தங்க கலசங்கள் நிறைந்த கோபுரங்களும் நிறைந்த ) ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவரே!
சந்ததியை காக்கின்ற பெருமானே! நன்மையே புரியும் தேவர்களின் தலைவனே!
விருப்பங்களை நிறைவேற்றும் கடவுளே! வள்ளி தேவியின் மனத்துக்கு விருப்பமான மணாளரே!
சிவயோக மாமுனிவரால் வழிபடப்பெற்றவரே! சக்தியாகிய வேல் வடிவமாக காட்சி அருளும் பெருமானே!
திருநாமங்களை பாராயணம் செய்வதால் மகிழ்பவரே! (தினம் தினம் ஷண்முகார்ச்சனை செய்யப்படுவதால் மகிழ்பவரே!)
நல்லைத்திருத்தலத்தே உறையும் எம் கடவுளே!
ஒளி பொருந்திய குரு பகவானான வியாழனின் பூசை ஏற்று இதயத்தே மகிழ்ச்சி கொண்டவரே
( முன்பு அரசர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் முற்றாக அழிந்த பின், போ.பி 1849 அளவில் இரகுநாத மாப்பாண முதலியார் அவர்களாலும், குருமார்களாலும் (கிருஷ்ணையர்) பூசிக்கப்பட்டதால் இதய மகிழ்ச்சி கொண்டு அவர்கள் பிரதிஷ்டித்த இடத்தில் எழுந்தருளியிருப்பவரே!)
எம் இறைவா! வெல்க ! வெல்க!! ஆறுமாமுகத்து ஆதியே! அழகின் வடிவினரே! ஆறெழுத்துப் பெருமானே! அடியார் உள குகையிலுறையும் பகவானே! என்னைக் காத்தருள்புரிய வேண்டும்!!
குகஸ்ரீ. தி.மயூரகிரி சிவாச்சார்யார்
COMMENTS