வேதமும் ஆகமமும் இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும்.இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம், ‘பொதுநூல்’ என்றும் ஆகமம், ‘சிறப்பு நூல்’ என்றும் கொள்ளப்படும். வேதத்தின் முடிவான வேதாந்தமும், ஆகமத்தின் முடிவான ஆகமாந்தமும் (அதாவது சித்தாந்தமும்) வேறுபட்டவை என்று கூறுவர். ஆயினும், இவற்றின் உண்மைப் பொருளைத் தெளிந்த ஞானிகளுக்கு இரண்டும் வேறுபாடு இல்லாதவையாகும்.
வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல்
ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.
- திருமந்திரம்-
எனவே, வேத, ஆகமங்கள் இறைவனுடைய மொழியாகவே கருதப்படுகின்றன. “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்று மாணிக்க வாசகப் பெருமான் பாடினார். வேத காலத்து முனிவர்கள் உலக விஷயங்களில் பற்று வைக்காமல் எல்லாவற்றிருக்கும் மேலான பரம்பொருளை ஆர்வத்துடன் நாடினார்கள். சீரிய முறையில் இறைவனைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, தங்கள் உள்ளத்தை அவர்கள் ஆழ்ந்து ஆராய முற்பட்டார்கள். அதன் விளைவாக இறை உணர்வு முழுதும் பெற்ற அருட் பெரியார்களுடைய உள்ளங்களில் வேதங்கள், கனிந்த அனுபவமாக எழுந்தன. அவர்களுடைய உள்ளங்களிலே எழுந்த வேதங்களின் ஒலி, பரம்பொருளைப் பற்றிய உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது. அந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட முனிவர்கள் பேரறிவைத் தம்முள் அனுபவித்துப் பேரின்பம் பெற்றார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை அவர்கள். தாங்கள் பெற்ற இன்பத்தை உலக மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டி, வழிவழியாக வாய்மொழியாகத் தங்களுடைய சீடர்களுக்கு வேதங்களையும் ஆகமங்களையும் உபதேசித்தனர்.
வேதங்கள்
இந்து மதத்தைப் பற்றி எமக்குத் தெளிவாக அறியத் தருவன வடமொழியிலமைந்த ‘வேதங்கள்’ எனப்படும் நூல்கள். இந்து மதத்தின் பிரமாண நூல்களான அவை வடமொழியிற் பெறப்படும் இந்து மதநூல்களுள் காலத்தால் பழைமை வாய்ந்தவை வேதங்கள் மனிதரால் ஆக்கப்பட்டவை அல்ல; இறைவனால் அனுபூதிமான்களாகிய இருடிகளுக்கு அருளப்பட்டவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் அவை புனிதமான நூல்களாகப் போற்றப்படுகின்றன. மேலும், இது எழுதப்படாது செவி
வழியாற் பேணப்பட்டு வந்தமையின் ‘எழுதா மறை’ எனவும் ‘சுருதி’ எனவும் மனிதர்களால் ஆக்கப்படாதவை எனும் கருத்தால் ‘அபௌருஷய நூல்கள்’ எனவும் வழங்குகின்றன.
இயற்கையில் இறைவனைக் கண்டவர்கள் எமது சமயப் பெரியார்கள். இவ்வியற்கை வழிபாடு வேத காலத்தில் இருந்தது. வேதகால மக்கள் இடி, மழை, காற்று, நீர் ஆகிய யாவற்றிலும் ஒரு சக்தியைக் கண்டார்கள்; இச்சக்தியை இறைவனாகப் போற்றினார்கள். இயற்கைத் தெய்வங்களாக அவர்கள் போற்றிய அக்கினி, இந்திரன், வருணன், வாயு முதலியவற்றின் மீது தோத்திரப் பாடல்கள் பாடினார்கள். இப்பாடல்களே இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
இருக்கு வேதம் பாட்டுக்களாலானது. இருக்கு என்ற சொல்லின் பொருள் பாட்டு என்பதாகும். இந்தப் பாட்டுக்கள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன் முதலான தெய்வங்களைப் போற்றி வழிபட்டு மக்கள் நன்மைகளைப் பெறுவதற்கு உதவுவன. இவ்வாறு பல தெய்வங்கள் இருக்கு வேதத்திலே போற்றப்பட்டாலும், பரம்பொருள் ஒன்றே என்பதுதான், இருக்கு வேதத்தின் முடிந்த முடிபு. ‘உண்மைப் பொருள் ஒன்றே. அறிவாளர் அதனைப் பல பெயர்களால் வழங்குவர்’ என்று இருக்குவேதம் கூறும். அந்த உண்மைப் பொருளைச் சைவரான நாம், சிவம் என்று போற்றுகின்றோம். சிவம் மங்கலமானது; ஆனந்தமயமானது; பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்தது.
வேதகாலவழிபாடு யாகத்தை அடிப்படையாகக் கொண்டது. யாக முறைகளை விரித்துரைக்கும் வேதம், யசுர் வேதம். யசுர் என்ற சொல் ‘யஜ்’ என்ற பதத்தின் அடியாகப் பிறந்தது. ‘யஜ்’ என்பதன் பொருள், வேள்வி என்பதாகும். இது முற்றும் உரைநடையால் அமைந்தது.
சாமம் என்ற சொல்லின் பொருள் இசை என்பது. இசைப்பாடல்களால் அமைந்ததே சாமவேதம். இவ்வேதத்தைக் கற்பதற்கு இசை அறிவு அவசியமாகும். வேள்விகளின்போது சாமவேதகானம் இசைக்கப்பட்டது.
அதர்வவேதம் ஒரு காலத்தில் வேத வரிசையிலே சேர்க்கப்படவில்லை. அதர்வர், அங்கிரசர் என்ற புரோகிதர்களுக்கு உரியது என்ற பொருளிலே ‘அதர்வாங்கிரஸ்’ எனும் பெயரில் இவ்வேதம் வழங்கப்பட்டது என்பர். இது உலகியல் சார்ந்த வாழ்விற்கே பெரிதும் உதவவல்லது; பாட்டாலும் உரைநடையாலும் ஆக்கப்பட்டது. வேதங்கள் தனித்தனி நான்கு பிரிவுகள் கொண்டவை. அவை சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் என்பனவாகும். இவற்றுள் முதல் இரண்டையும் கன்மகாண்டம் எனவும் பின்னைய இரண்டையும் ஞானகாண்டம் எனவும் வழங்குவது மரபு. சங்கிதைகள் பாடற்றொகுப்புக்கள். பிராமணங்கள் வேள்விக்கான விதிமுறைகள். ஆரணியங்கள் வனங்களிலே ஞானிகள் அருளிச்செய்தவை. யாகங்களின் உண்மைப் பொருளையும் அவை குறிப்பனவற்றையும் ஆரணியங்கள் விளக்குகின்றன. உபநிடதங்களே வேதங்களின் எல்லை. ஆழமான தத்துவங்களை இவை புலப்படுத்தும். இவற்றை வேதாந்தங்கள் எனவும் அழைப்பர்.
வேதகால மக்கள் தாம் போற்றிய தெய்வங்களுக்குத் தானியம், பால், சோமரசம் முதலியவற்றைப் படைத்தார்கள். ‘போரில் வெற்றி, நீண்ட ஆயுள், மக்கட் செல்வம் ஆகியனவற்றை நீ எனக்குத் தா’ என்று வேண்டினார்கள். யாகங்கள், கிரியைகள் இவ்வாறே வளர்ச்சியடைந்தன. ‘பிரமாணங்கள்’ எனப்படும் வேதநூற் பகுதிகள் இதற்குச் சான்றுபகர்கின்றன. இங்ஙனம் உருவாகிய கிரியைகள் இன்றும் இந்து மதத்திலே தனியிடம் வகிக்கின்றன.
வேதகால ஆரியர் பல தெய்வங்ளைப் போற்றி வந்தனரெனினும் ‘தெய்வம் ஒன்றே’ எனும் கருத்து அவர்களது மனத்தின் அடித்தளத்தில் இருந்திருக்க வேண்டும். பல தெய்வங்களுக்குள்ளும் குறித்த ஒரு பொழுதிற் குறித்த ஒரு தெய்வத்தையே மனத்திற் பதித்து, அத்தெய்வத்தையே தாம் போற்றும் தலைமைத் தெய்வமாக வழிபட்டு வந்தனர். மேலும், ‘மெய்ப்பொருள் ஒன்றே அதனையே அறிஞர்கள் அக்கினி என்றும் வருணன் என்றும் வெவ்வேறு பெயர்களாற் குறிக்கின்றனர்’ என்று கூறுகிறது ஒரு வேத சுலோகம். பரம்பொருள் ஒன்றே எனும் கருத்து உபநிடதங்களில் மேலும், வலுப்பெற்றுள்ளது. சைவர்கள், சாக்தர்கள், வைணவர்கள் ஆகிய இந்து மதத்தின் மூன்று பிரிவினருக்கும் வேதங்கள் பொதுவான மூல நூல்களாகும்.
வேதமும், ஆகமமும் இறை உண்மையை எடுத்துக் கூறும் நூல்களாகும். இவற்றில் ஆகமம் சைவ சமயத்தின் சிறப்பு நூலாகும். சைவசமயத்தைச் சார்ந்த ஆகமங்கள், சிவாகமங்கள் எனப்படும். அவை காமிகம் முதல் வாதுளம் வரை 28 ஆகும். வைணவ சமயத்துக்குரிய ஆகமங்கள், சங்கிதை எனவும் சாக்த சமயத்துக்குரிய ஆகமங்கள், தந்திரங்கள் எனவும் வழங்கப்படும். ‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘தொன்று தொட்டு வரும் அறிவு’ அல்லது இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் நூல் என்பதாகும்.
‘ஆகமம்’ என்பது ஆ+க+ம எனப் பிரிந்து, ஆ - சிவஞானத்தையும் க - மோட்ச தானத்தையும் ம- மல நாசத்தையும் குறித்து, ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் செய்து ஞானத்தை உதிப்பித்து மோட்சம் கொடுப்பதற்காக தோற்றுவித்த நூல் எனப்படும். ‘ஆகமம்’ என்பது, ஆ+ க+ ம+ எனப்பிரிந்து, ஆ - பசு, க - பதி, ம - பாசம் எனப்பொருள் தந்து, பதி, பசு, பாச இலக்கணங்களை விபரித்துக் கூறும் நூல் எனப்பொருள் தரும். ஆகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டன என்பதை
‘மன்னுமாமலை மகேந்திரமதனிற்
சொன்ன கேமம் தோற்றுவித்தருளியும்...’ (மணிவாசகர்)
“வேதமோடாகமம்மெய்யாம் இறைவநூல்...” (திருமூலர்)
“ஆகமமாகி நின்று அண்ணிப்பான்...” (மாணிக்கவாசகர்) என்னும் அறிஞர்கள் நூல்களின் மூலம் அறியலாம்
ஆகமங்களின் குறிக்கோள் ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய வீடுபேற்றை அடையச் செய்தலாகும். இச்சிவாகமங்கள் ஒவ்வொன்றும் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என நான்கு பிரிவுகளை உடையவை. ஆகமங்கள் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றன.
* கோயிற் கிரியைகளும் அவற்றைச் செய்யும் முறைகளும்
* வழிபடுவோருக்குரிய இயல்புகள்
* சைவ சாதன வழிபாட்டினால் ஆன்மாக்கள் அடையும் பேறுகள்
* ஆலயம் அமைப்பதற்கான இடம், அதன் அமைப்பு முறை
* படிம இலக்கணம், படிமங்களை வார்க்கும் முறை
* வாகனங்கள், தேர் அமைக்கும் முறை
* அர்ச்சகர், சிற்பாசாரியர் ஒழுக்கம்
ஆகமங்கள் இருபத்தெட்டு. இவ்வாகமங்கள் கடவுள், உயிர், உலகு ஆகிய முப்பொருள்களின் இயல்பினையும் இறைவனை உணர்வதற்கு உதவும் சரியை, கிரியை, யோகம், ஞானம், எனும் நான்கு மார்க்கங்கள் பற்றியும் சிவசின்னங்கள், கோயிலமைப்பு முறை, கோயிற் கிரியைகள் பற்றியும் எடுத்துரைப்பன. இவ்வாறாகச் சைவ சமய வழிபாட்டினை அறிவதற்கு உதவும் நூல்கள் சிவாகமங்கள் ஆகும். சிவாகமங்கள் காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். வாதுளம், காமிகம் என்பவை சில சிவாகமங்களின் பெயர்கள். இவற்றுக்குச் சிவதருமோத்திரம் முதலிய இருநூற்றேழு உபாகமங்கள் உண்டு. சிவாகமங்கள் வாழ்க்கையிற் சைவ நெறியைக்
காட்டும் நூல்களாக விளங்குகின்றன. தமிழிலுள்ள ஆகம நூல்கள் பற்றி பத்தாம் திருமுறையான திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண்கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்றப் பொருள் ஏத்துவன் நானே.
- திருமந்திரம் -
COMMENTS