யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆலயம் தனித்துவச் சிறப்புடையது. பழைமை மிக்கது. வரலாற்றுப் பெருமை கொண்டது.
இத்தல வழிபாட்டிற்கு வரும் அனைத்து அடியவர்களும் திருமண் என்ற நாமத்தை நெற்றியில் அணிந்து கொள்கிறார்கள். தமிழகத்து ஸ்ரீரங்கம் முதலிய விஷ்ணுவாலயங்களில் கூட வைஷ்ணவர்கள் மட்டுமே திருமண் அணிய, இங்கு அனைவரும் திருமண் அணிகிறார்கள். இப்பகுதியில் இயற்கையாக திருமண் கிடைக்கிறது.
இதே வேளை ஸ்தலத்தில் ஜமதக்னி ரிஷி மரபு வைதிக சைவ அந்தணர்களே வழி வழியாக பூஜை செய்வதோடு திருநீற்றுப்பிரசாதமும் வழங்குகிறார்கள். மேலும் இங்கு திருமுறையோடு திவ்ய பிரபந்தம் ஓதப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சுதர்சன சக்கர வடிவாக இறைவன் காட்சி தருகிறான். திருத்தேராகட்டும் ஏனைய வாகனங்களாகட்டும் (கருடன், அனுமன் உள்ளிட்ட) சக்கர வடிவ மாயனே எழுந்தருள்கிறான்.
இளவல்லி என்ற பெண்ணின் சாபம் தீர மத்ஸய (மீன்) வடிவம் கொண்டு அவளது மடியில் விழுந்து குழந்தையாய் தவழ்ந்தவன் வல்லிபுர கண்ணன் என்கிறது தக்ஷண கைலாச மஹாத்மியம்.
இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படும் புரட்டாதி பௌர்ணமியை சமுத்திர தீர்த்த நாளாக கொண்டு இவ்வாலய மஹோத்ஸவம் நடக்கிறது. இந்த சமுத்திர தீர்த்த விழா யாழ்ப்பாணத்தில் அதிகளவான அடியவர்கள் கூடும் முக்கிய விழாவாக கருதப்படுகிறது.
கோடி சூர்ய பிரகாசனாக சக்கர மூர்த்தியாக இறைவன் எழுந்தருளியிருப்பதால் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் வழிபாட்டுக்கான கூடுகிறார்கள்.
விநாயகர், ஆஞ்சநேயருக்கு ஆலய வழிபாட்டில் முதன்மை உள்ளது. திருவிழாக் காலத்திலும் சக்கர வடிவ இறைவனோடு மஹா லக்ஷ்மியும் விநாயகரும் ஹநுமனும் எழுந்தருள்கிறார்கள்.
இத்தலத்தை நான் வல்லவாழ் என்ற திவ்ய தேசத்தோடு ஒப்பிட்டு சிந்திப்பதுண்டு. பெயரளவில் மட்டுமல்ல பலப்பல ஒற்றுமைகள் இவ்விரு தலத்திற்கும் உண்டு.
உச்சியில் சங்க சக்ர திருநாம சின்னங்களோடு கூடிய உயர்ந்த ராஜ கோபுரம், அகன்ற மூன்று திருச்சுற்றுக்கள், நாற்றிசை வாயில்கள் என்று திகழும் வல்லிபுரம் வாழ் வரதனை மாயவன் என்றே உள்ளம் உருக வணங்குகிறார்கள்.
நாளை மறுநாள் (01.10.2020) வங்க கடலில் சுதர்சன சக்ர ஸ்நானம் என்ற சமுத்திர தீர்த்த விழா வல்லிபுரத்தில் நிகழவுள்ளது.
தொல் அருள் நல்வினையால்
சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலன்
ஏத்தும் திரு வல்ல வாழ்
நல்லருள் நம் பெருமான்
நாராயணன் நாமங்களே (திருவாய்மொழி)
தியாக. மயூரகிரிக்குருக்கள்
COMMENTS