பக்திச்சுவை சொட்டும் தமிழ்க்காப்பியம் என்ற பெருமைக்குரியது பெரியபுராணம். சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் இறுதி நிலையில் - திருமுறைகளுள் ஒன்றாக வைத்துப் போற்றப்படும் சிறப்பு இதற்கு உண்டு. இதனைத் திருத்தொண்டர் மாக்கதை எனவும் திருத்தொண்டர் புராணம் எனவும் சிறப்பிப்பர். இக்காப்பியத்தை அருளியவர் சேக்கிழார் பெருமான் ஆவார். இவர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. புலவர் க. வெள்ளைவாரணார் கருத்துப்படி இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படுகின்றார்.
'உலகெலாம்' என இறைவனே அடியெடுத்துக் கொடுத்த சிறப்பு பெரியபுராணத்திற்கு உள்ளது. உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம் என முடியும் காப்பியம் என்ற பெருமையும் பெரியபுராணத்திற்கு உண்டு.
சுந்தரமூர்த்தி நாயனாரால் அருளப்பெற்ற திருத்தொண்டத்தொகையை முதல்நூலாகவும் நம்பியாண்டார் நம்பியால் பாடப்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு 4286 பாடல்களைக் கொண்டு (சில நூற்பதிப்புக்கள் 4253 பாடல்களையே கொண்டுள்ளன) அமைந்திருப்பது பெரிய புராணம். இக்காப்பியம் இரு காண்டங்களாகவும் பதின்மூன்று சருக்கங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது. அறுபத்துமூன்று தனியடியார் வரலாறுகளும் ஒன்பது தொகையடியார் வரலாறுகளும் இந்நூலில் உள்ளன.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்களுக்குப் பெரிய என்ற அடை இல்லாத நிலையில் நான்காயிரத்திற்குச் சற்று அதிகமான பாடல்களைக் கொண்ட இந்நூல் பெரிய என்ற அடையைப் பெறுவதற்குக் காரணம் இந்நூல் தொண்டர்களுடைய பெருமையைப் பேசுவதனால் ஆகும். 'தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே' என்ற ஒளவையின் வாக்கிற்கு அமைவாக இந்நூல் தொண்டர்களுக்குள்ள பெருமையால் பெரிய புராணம் என்ற பெயரைப் பெற்றது.
சைவத்தின் தனித்துவக் காப்பியம்
சைவசமயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் தனித்துவம் மிக்க காப்பியம் என்ற பெருமை பெரிய புராணத்திற்கு உண்டு. தமிழில் எழுந்த கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி என எக்காப்பியமும் இப்பெருமையைப் பெறுவதில்லை. அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் (01) என்றும் இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் (23) என்றும் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான் (179) அருமறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அரியான் (192) முன்னாகி எப்பொருட்கும் முதலாகி நின்றான் (1421) என்றவாறு அமைந்த அடிகள் சிவனது பெருமையைச் சுட்டுகின்றன.
சிவனடியார் எப்படி இருப்பர்?
பெரிய புராணத்தின் திறவுகோலாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் இரு பாடல் களைச் சுட்டிக்காட்டுவார்.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்:
(143)
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணிஅலது ஒன்றிலார்
ஈர அன்பினர் யாதும் குறைவிலர்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ?
(144)
குரு லிங்க சங்கம வழிபாடு
சிவப்பேறு அடைவதற்கான மார்க்கங்களுள் ஒன்று குருலிங்க சங்கம ( சங்கமம் - அடியார் திருக்கூட்டம்) வழிபாடு ஆகும். பெரியபுராணம் காட்டும் தனியடியார்கள் அறுபத்துமூவருள் குருவழிபாட்டில் பன்னிருவரும் லிங்க வழிபாட்டில் முப்பதுபேரும் சங்கம வழிபாட்டில் பத்தொன்பது பேரும் ஈடுபட்டு முக்தியடைந்துள்ளனர் என நாவலர் பெருமான் குறித்துக்காட்டியுள்ளார்.
சிவபெருமான் எமது பிறவித் துன்பத்தை நீக்கவே குருவாக எழுந்தருளுகின்றார். இதனைத் திருவருட்பயன் பாடல் பின்வருமாறு விளக்குகின்றது.
பார்வையென மாக்களைமுன்
பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி
பழக்கப்பட்ட மிருகத்தின் உதவியுடன் அதே இனத்து மிருகத்தைப் பிடிப்பர். அதே போலச் சிவன் எம்மை ஆட்கொள்ள மானுடச் சட்டை தாங்கி வருகின்றார். திருமூலர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், அப்பூதியடிகள் முதலியோர் குருவழிபாட்டால் வீடுபேறு அடைந்தோராவர். குருவை உள்ளன்போடு வழிபடும் முகமாக நாயன்மார்களது குருபூஜைத் தினங்களை நாமும் அனுஷ்டிக்கின்றோம்.
நாவலருடைய வேண்டுகோளை ஏற்று நம்மண்ணில் சைவநாயன்மார்களதும் மணிவாசகரதும் சேக்கிழாரதும் சந்தான குரவர்களதும் குருபூஜைகள் மிகத் தீவிரமாக ஆலயங்கள், மடங்கள், பாடசாலைகள் தொறும் இடம்பெற்றனவாயினும் இச்செயற்பாடுகளில் தற்போது ஒரு தொய்வு நிலை எதிர்கொள்ளப்படுவது வருத்தத்திற்குரியதாகும்.
லிங்க வழிபாடு என்பதில் லி என்பது ஒடுங்குதலையும் கம் என்பது தோன்றுதலையும் குறிப்பதாகக் கொள்வர். திருக்கோவில்களில் உள்ள விக்கிரகங்களில் முதன்மை பெற்றது சிவலிங்கமே ஆகும். சிவலிங்கத்தின் கீழ்ப்பீடம் ஆவுடையார் எனவும் மேற்பாகம் பாணம் அல்லது லிங்கம் எனவும் பெயர் பெறும். சேரமான் பெருமாள், சாக்கியர், கலிக்காமர், பூசலார் முதலியோர் சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு முத்தி பெற்றனர்.
சிவனடியாரிடம் மெய்யன்பு பூண்டு ஒழுகுவோரே சங்கம வழிபாட்டிற்கு உரியவர் ஆவர். சிவனை நினைத்தலிலும், அவரைப் பற்றிக் கேட்டலிலும் இன்புறுவர். அடியாருக்குரிய பாவனை, செயல், வேடம் என இவை எவற்றையும் உடைய ஒருவரைச் சிவமாகவே கருதி வழிபடுவர். ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரத்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுள்' என நாவுக்கரசர் போற்றுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. திருநீலகண்டர், சிறுதொண்டர், இளையான்குடிமாறன், இயற்பகையார் முத லியோர் சங்கம வழிபாட்டை மேற்கொண்டு முக்திபெற்றனர்.
சமுதாயக் காப்பியம்
சோழ மன்னனின் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார் பெரிய புராணத்தில் அரசியல் நெறிமுறைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். சேரமன்னனாகிய சேரமான் பெருமாளையும் சோழ மன்னன் ஆகிய புகழ்ச்சோழன் மற்றும் கோச்செங்கட்சோழன் ஆகியோரையும் பாண்டிய மன்னனாகிய நின்றசீர் நெடுமாறன், மனைவி மங்கையர்க்கரசியார் ஆகியோரையும் ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர் ஆகிய பல்லவ மன்னர்களையும் கூற்றுவ நாயனார் என்ற களப்பிர அரசனையும் மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் போன்ற குறுநில மன்னர்களையும் சிறுதொண்டர், மானக்கஞ்சாறனார், ஏயர்கோன் கலிக்காமர் போன்ற படைத்தலைவர்களையும் நாயனார்களாக பெருமைப்படுத்துகின்றது பெரியபுராணம்.
பல்வேறு குலத்தவர்களும் பேதம் பாராது இங்கு நாயன்மார்கள் என்ற உயர் தகைமைக்கு உள்ளாகின்றனர். திருஞானசம்பந்தர் என்ற அந்தணர் பாடும் பாடல்களுக்கு திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற பாணர் யாழ் வாசிக்கின்றார். பாணரையும் அழைத்துக் கோவில் பிரவேசம் செய்கிறார் சம்பந்தர்.
அந்தணராகிய அப்பூதியடிகள் வேளாண் குடியைச் சார்ந்த அப்பர் அடிகள்பால் அன்பு கொள்கிறார். ஆதி சைவர் மரபில் தோன்றிய சுந்தரர், அரசவையில் வளர்கின்றார். கணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையாரைக் களவு மணம் செய்கின்றார். வேளாண்குடி சார்ந்த சங்கிலியாரைக் கற்புமணம் புரிகின்றார். இவ்வாறு சாதி வேறுபாடுகளைக் களைவதை அடிப்படைச் செய்தியாகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியமாகப் பெரியபுராணம் திகழ்கின்றது. இன்றைய இலக்கியக்காரர் பார்வையில் சொல்வதானால் ஒரு முற்போக்குக் காப்பியமாகப் பெரியபுராணம் திகழ்கின்றது.
காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார் ஆகிய பெண்களை நாயன்மார்களாகக் காட்டிய காப்பியம் பெரிய புராணம். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சமதையான அந்தஸ்து வழங்கப்படாத காலத்தில் சேக்கிழார் இக்கருத்துப் புரட்சியை மேற்கொண்டிருக்கின்றார்.
தமிழ் வழிபாடு இன்று முனைப்புப் பெறும் சூழலில் 'அர்ச்சனை பாட்டேயாகும்' என்று இசையோடும் பொருளோடும் கூடிய பக்திப் பாடலே அர்ச்சனையாகும் என்கிறார்.
இன்று எமது சமயம் எதிர்கொள்ளும் ஆரோக்கியமற்ற பூசல்களுக்குத் தீர்வாக பெரியபுராணத்தை முதன்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது சாலச்சிறந்ததாக அமையும். இதனை உணர்ந்த நம்முன்னோர் இத்தகைய செயற்பாடுகளை காலத்திற்குக் காலம் முன்னெடுத்துள்ளனர். இது குறித்த சில தகவல்களை இக்கட்டுரையாளர் தனது அறிவுக்கெட்டிய வரையில் இங்கு பதிவு செய்துள்ளார்.
பஞ்சபுராணப் பாரம்பரியத்தில் பெரியபுராணம்
நாவலர் ஏற்படுத்திய பஞ்சபுராணம் பாடும் மரபில் நிறைவுப் பாடலாக அமைந்திருப்பது பெரியபுராணம் ஆகும். கோவில்களிலும் விழாக்களிலும் திராவிட கானம் என்ற நிலையில் தேவாரமும் பெரிய புராணப் பாடலும் பாடும் நிலை மையே இன்று நடைமுறையில் பெருவழக் காகக் காணப்படுகின்றது. தவிர, பெரிய புராணத்திற்குப் பதிலாக கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய பாடல் களைப் பாடும் நிலைமையையும் காண முடிகின்றது.
ஆலயத்தில் திருமுறை ஓதுகின்றவர்கள் புராணம் பாடும் போது பெரிய புராணத் தையே பாட வேண்டும் என்ற மரபு நீண்டகாலமாக நம்மண்ணில் பேணப் பட்டு வருகின்றது. அதனை மீண்டும் வலியுறுத்திப் பேணவேண்டியது எமது கடமையாகும்.
அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் என்ற அமைப்பு 1950 களில் இருந்து 1980 கள் வரை யாழ்ப்பாண மண்ணை மையப்படுத்திச் செயற்பட்ட ஓர் அமைப்பாகும். அரசடியைச் சேர்ந்த சட்டத்தரணி அமரர் சோமசுந்தரம் இதன் செயலாளராக இருந்து செயற்பட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் இம்மன்றச் செயற்பாடுகள் செயலிழந்துபோயின. அமரர்களான சொக்கன், சிவராமலிங்கம்பிள்ளை போன்ற ஆசிரியர்கள் இம்மன்றச் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தனர். சைவபரிபாலன சபையைச் சேர்ந்த பெரியோர்களும் யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்களும் இந்த மன்றத்தை அமைத்துச் செயற்படுத்துவதில் பெரும்பங்காற்றினர்.
அருணைவடிவேல் முதலியார், பேராசிரியர் ஆறு. அழகப்பன், முதலிய தமிழக அறிஞர்கள் காலத்திற்குக் காலம் இவ்விழாவில் பங்கேற்றிருக்கின்றனர். யாழ். வண்ணைச் சிவன் கோவிலில் இருந்து திருமுறைச் சுவடிகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று யாழ். இந்துக் கல்லூரித் திறந்தவெளி அரங்கில் சேக்கிழார் விழா நடத்திய பெருமை இந்த மன்றத்திற்கு உண்டு.
இன்று யாழ்.மண்ணின் முன்னணி ஆன்மீகப் பேச்சாளராகத் திகழும் கலாநிதி ஆறுமுகம் திருமுருகன் ஆறு.திருமுருகன் என்ற நாமத்தைச் சூடிக்கொண்டதும் சேக்கிழார் மன்றம் முன்னெடுத்த விழா ஒன்றிலேயே ஆகும். 1973 ஆம் ஆண்டில் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சேக்கிழார் விழாவின் போது பேராசிரியர் ஆறு. அழகப்பன் வந்திருந்த சூழலில் மாணவனாகப் பேச மேடையேறிய திருமுருகனை அழைத்த தேவன் ஆறு.திருமுருகன் இருக்கிறார் என அழைத்தாராம். அதற்குப் பின்னர் ஆ.திருமுருகன், ஆறு.திருமுருகன் என்ற அடையாளத்தைப் பெற்றார்.
1980களில் கைவிடப்பட்ட சேக்கிழார் மன்றச் செயற்பாடுகள் 2003 இல் சில ஆர்வமுள்ள இளைஞர்களால் மீள ஆரம்பிக்கப்பட்டன. சேக்கிழார் கழகம் என்ற பெயரை அது கொண்டிருந்தது. நல்லை ஆதீனத்தில் அவ் ஆண்டு சேக்கிழார் விழா நடத்தப்பட்டது. இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக அதன் செயற்பாடுகள் ஒராண்டுடன் நின்றுவிட்டன.
நல்லை ஆதீனத்தின் முதலாவது குருமகா சந்நிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஒரு முறை சேக்கிழார் விழாவை பிரமாண்டமாக முன்னெடுத்துள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட சேக்கிழார் திருவுருவச்சிலை ஆதீனத்தில் இன்றும் உள்ளது.
யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் சேக்கிழார் விழாக்கள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் காலக்கிரமமாக சேக்கிழார் விழா முன்னெடுக்கப்படும் செயற்பாடு யாழ். இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட சேக்கிழார் விழாவுடன் நின்றுவிட்டது.
ஊருக்குப் பெயர்
அறுபத்து மூவரைப் பெருமைப்படுத்தும் விதமாக நல்லூரில் உள்ள ஓர் ஊர் நாயன்மார்கட்டு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு அறுபத்துமூவர் மடம் இருந்ததாகக் குறிப்பிடுவர். ஆயினும் இன்று இங்கு மடம் காணப்படவில்லை. ஊர்ப்பெயர் நின்று நிலைத்துள்ளது. நாயன்மார்கட்டுடன் பெரியபுராணப் பெருமை ஒட்டியுள்ளமையை இவ்வூர் மக்கள் உணர்வது அவர்களுக்குப் பெருமை தருவதாக அமையும்.
அறுபத்துமூவர் மடம்
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேரடியில் 1892 இல் அமைக்கப்பெற்ற திருமடம் அறுபத்துமூவர் குருபூசை மடம் என்ற பெயரில் அமைக்கப்பட்டது. வை.அருணாசலம், சு.ஆறுமுகம், க.கார்த்திகேசு, ச.சடையம்மா, சி.கதிரைவேற்பிள்ளை ஆகியோர் இப்பணியில் இணைந்ததாக அறியமுடிகின்றது. இதனைவிட சுழிபுரத்திலும் அறுபத்துமூவர் மடம் உள்ளது. வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலும் அறுபத்து மூவர் மடம் அமைந்துள்ளது. நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வீதியில் திருநாவுக்கரசு நாயனார் திருமடம் உள்ளது. இங்கு அறுபத்து மூவர் குருபூசை கிரமமாக இன்றும் இடம்பெறுகின்றது. இதற்கெனத் தனித்தனி உபயகாரர்கள் உள்ளனர்.
பெரியபுராண நூலாக்கம்
பெரியபுராணம் ஆலயங்களில் படிக்கப்படும் சிறப்பு இலங்கையில் பல காலமாக நிலவி வருகின்றது. இன்றும் சில ஆலயங்களில் இந்நடைமுறை உண்டு. ஆறுமுகநாவலர் தமது நூலாக்க முயற்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். புராண நூல்களுக்கு அவர் வசன வடிவம் கொடுத்தார். திருத்தொண்டர் பெரியபுராண வசனம் என்ற பெயரில் 1852 இல் நூலை வெளியிட்டார். இந்நூல் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்புக்களைக் கண்ட சிறப்பிற்குரிய நூலாகும்.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பன்னிரு திருமுறைகளை நூலாகத் தொகுத்து வெளிக்கொணரும் பாரிய பணியை முன்னெடுத்துள்ளது. அதில் ஓரங்கமாக பெரியபுராணம் தொடர்பான மூன்றாவது தொகுதியை ஆலயம் இந்த ஆண்டு (2017) வெளியிட்டுள்ளது.
யாழ். இளவாலையைச் சேர்ந்த சிவயோகவதி கந்தவனம் அறுபத்துமூவர் வரலாற்றை அருளாளர் தொண்டு என்ற பெயரில் 2013இல் நூலாக வெளியிட்டுள்ளார். ராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, அருளாளர் அறுபத்துமூவர் என்ற பெயரில் 2016 இல் காத்திரமான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அறுபத்து மூவர் பற்றிய வரலாற்றை உரைக்கும் நூலாக உள்ளது.
இளவாலையைச் சேர்ந்த பண்டிதர் அப்புத்துரை, ஏழாலை மாதாஜி அம்மையார், இணுவில் மூ.சிவலிங்கம் போன்றோரும் அறுபத்து மூவர் வரலாறு பற்றிய சிறிய நூல்களை வெளியிட்டுள்ளனர்.
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ச.லலீசன் ஆகியோர் இணைந்து 2010இல் பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் என்ற நூலைப் பதிப்பித்துள்ளனர். இது பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் 2009ஆம், 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஆறு கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும்.
கொழும்பு கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் 2010 ஐ அண்டிய காலப்பகுதியில் பெரியபுராணத் தொடர் பேருரை இடம்பெற்றது. இப்பேருரையை தமிழகத்தின் பிரபல பேச்சாளர் அமரர் இரா.செல்வகணபதி நிகழ்த்தினார். இதே வேளை 2003 ஆம் ஆண்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பெரியபுராணம் குறித்துச் சிறப்புரையாற்றினார். யாழ்ப்பாண வரலாற்றில் இஸ்லாமியர் ஒருவரால் பெரிய புராணம் குறித்த பக்தி உரை நிகழ்த்தப்பட்ட முதல்சந்தர்ப்பம் இதுவே ஆகும்.
நெல்லியடி தடங்கன்புளியடி முருகன் கோவில் மண்டபத்தில் ப.தயாபரனின் ஏற்பாட்டில் சேக்கிழார் விழா 2003 இல் இடம்பெற்றது. தமிழகப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம் கம்பவாரிதி இ.ஜெயராஜுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வடபுலத்தில் ஆலயத் திருவிழாக்களின் போது பெரியபுராணம் தொடர்பான தொடர்பேருரைகள் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் பேருரைகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது இக்கட்டுரையாளரின் கணிப்பு ஆகும். ஆன்மீகப் பேச்சாளர்கள் பலரும் இலகுவில் கையாளும் தொடர் சொற்பொழிவுக்குரிய விடயமாகப் பெரியபுராணத்தையே கொண்டுள்ளனர்.
இந்து சமய அலுவல்கள் அமைச்சு 2005 ஆம் ஆண்டில் ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டை இலங்கையில் (கொழும்பில்)முன்னெடுத்தது. இது தொடர்பான சிறப்பு மலர் 'தெய்வச்சேக்கிழார்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அறுபத்து மூவர் குருபூசை
அறுபத்து மூவருக்குக் குருபூசை எடுக்கும் வழக்கம் பல இடங்களில் காணப்பட்டது. தற்போது இது வழக்கொழிந்துவிடும் நிலையில் காணப்படுகின்றது.
யாழ். புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் நிறுவுனர் மழவராயர் கந்தையா பாடசாலைக்கென எழுதிய சாசனத்தில் அறுபத்து மூவர் குருபூசையை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை எழுதிவைத்தார். இறுதியாக 2005 ஆம், 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்லூரியில் அறுபத்து மூவருக்கும் குருபூசை முன்னெடுக்கபட்டது. கோவிலில் பூசையும் காலைப் பிரார்த்தனையில் நாயனார் பற்றிய மாணவர் உரையும் இடம்பெற்றன. ஆயினும் தற்போது இவ்வழக்காறு நடைமுறையில் இல்லை. நேர விரயத்தைக் காரணம் காட்டியும் வேறுசில காரணங்களாலும் பாடசாலைகளில் சமயகுரவர்களுக்குரிய குருபூசைகள் முன்னெடுக்கப்படும் நிலைமைகள் அருகிவருகின்றன.
விழுமியங்களுடைய பற்றாக்குறையால் வன்முறை மேலோங்கும் சமூக நிலைமைக்குத் தீர்வாக சைவநாயன்மார்கள் பற்றிய நிகழ்வுகளை நடைமுறை வாழ்வியலோடு முன்னெடுத்துச் செல்வது பொருத்தமாக அமையும். எடுத்துக்காட்டாக சூழல் மேம்பாடு குறித்த சமூகப் பணிகளை முன்னெடுத்தவராக திருநாவுக்கரசரை அடையாளப்படுத்தலாம். எந்தப் பொழுதிலும் சிதைவுறாத பக்தி வைராக்கியம் சிறந்த மனத்திடத்தை ஏற்படுத்த வல்லது. சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குப் பெறத்தக்க வகையில் பெரியபுராணச் செய்திகளைக் கையளிக்கும் உத்தியைப் பேச்சாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
அறுபத்துமூவர் திருவுருவச் சிலைகள்
அறுபத்து மூவருக்கு ஐம்பொன்னில் விக்கிரகங்கள் அமைத்த முதல் ஆலயமாக முன்னேஸ்வரம் சிவன் கோவில் விளங்குகின்றது. திருக்கேதீஸ்வரத்திலும் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் உண்டு. நயினாதீவு நாகபூசணி அம்மன் பரிவாரத்தில் அறுபத்துமூவர் சிலைகள் உள்ளன.
நிறைவாக
பெரியபுராணம் சார்ந்த செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்த்தல், சூழல் பற்றிய சிந்தனைகளை மேலோங்கச் செய்தல் பக்திப் பயிர் செழிப்புறச் செய்தல் சமூகப் பணியில் சமயம் சார் நிறுவ னங்களை, ஆலயங்களை ஊக்குவித்தல் தமிழ் சார்ந்த வழிபாட்டுணர்வுகளுக்கான முதன்மை வழங்கல் முதலிய செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கு பெரிய புராணத்திற்கு வழங்கப் படும் முதன்மை களம் அமைத்துக் கொடுக் கும். தமிழர்களின் வாழ்வியலில் சொந்த இலக்கியங்களை விட வந்த இலக்கியங் களையே முதன்மைப்படுத்தும் போக்குக் காணப்படுகின்றது. இலக்கிய அமைப்பில், பாடுபொருளில், கவிச் சிறப்பில், கற் பனை வளத்தில், பக்தி ரசத்தில் சிறந்து விளங்கும் பெரியபுராணம் பற்றிய விழிப்புணர்வு இளையோரிடத்தில் கட்டியெழுப் பப்படுவது காலத்தின் கடமையாகும். தனியே சைவக்காப்பியம் என்ற வட்டத்துள் இக்காப்பியத்தை வரையறுக்காது தமிழின் செழுமைக்கு அழகு தரும் காப்பியம் என்ற உணர்வை எல்லோரிடமும் விதைத்தல் நலம் தரும்.
செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் பிரதி முதல்வர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை
COMMENTS