பொன்னாலை வரதராஜப்பெருமாள் பெருங்கோயில் ஈழத்து விஷ்ணுவாலயங்களில் முதன்மையானது.
கூர்மாவதார க்ஷேத்திரமான இது இந்திரன் வழிபட்ட தலம்.
சதுரங்கம், ஸ்வர்ணாலயம் என்றெல்லாம் போற்றப்படும் பேராலயம்.
ஒரு காலத்தில் இத்தலம் ஸப்த பிரகாரங்களோடு (ஏழு திருவீதிகளுடன்) விளங்கியதாம். பின்னர் போர்த்துக்கேயர் அத்தலத்தை அழித்தனராம்.
வரதராஜனாக பேரருளாளனாக திகழும் இத்தல பெருமாளுக்கு ஓராண்டில் இரண்டு மஹோத்ஸவங்கள் நிகழ்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஒன்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஒன்றுமாக இரண்டு முறை கொடியேற்றத்தோடும் தேர்த்திருவிழாவுடன் பெருவிழா நடக்கிறது.
இதனால் இது திருவரங்கத்திற்கு இணையாக ஸ்ரீ வைகுண்டமாக யாழ்ப்பாணத்தில் திகழ்கிறதெனலாம்.
வைகுண்ட வ்ரஜை நதி காவேரியாக ஓடுவது போல இங்கும் வங்க கடலாக பொன்னாலயத்தை தழுவுகிறது. பிரணவாகாரமாக புண்ணியகோடி விமானம் உயர்ந்து நிற்கிறது. வாசுதேவனே வரதராஜனாக திகழ்கிறான்.
தவிர இத்தல குருமார்கள் மிக சிரத்தையோடு திருமாலை அர்ச்சித்து மகிழ்கிறார்கள். தற்போது பிரதான குருவாக திகழும் வேதாகம அறிஞரான சோமாஸ்கந்தக்குருக்களும் அவரது புதல்வர்களும் வரதனுக்கு வேதாகமோக்தமாகச் செய்யும் ஆராதனை மிக சிறப்பானது.
ஸ்ரீராமர், கிருஷ்ணர், தசாவதார மூர்த்திகள், ஆஞ்சநேயர், தன்வந்திரி, கருடாழ்வார், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்கிரீவர், மஹா லக்ஷ்மி, ஆண்டாள், ஆழ்வார்கள், குருவாயூரப்பன், ரங்கநாதர் என விஷ்ணு மூர்த்தங்களுக்கெல்லாம் இங்கு தனித்தனிச்சந்நதிகள் உள்ளன.
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப்
பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள்
செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
- திருமங்கையாழ்வார்
செம்பொன் செய் கோயிலான் பொன்னாலை ஹேமரங்கப் பெருமாள் அருள் பெருகட்டும்.
பெருமாள் பள்ளி கொண்டருளும் ரங்கங்களில் மத்ய ரங்கம், ஆதி ரங்கம், ஸ்ரீ ரங்கம் என்பன சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அவ்வகையில் இது பொன்னரங்கம் (ஹேமரங்கம்) என கொண்டாடப்படத்தக்கதாகும்.
தியாக. மயூரகிரிக்குருக்கள்
COMMENTS