சிவாகமங்கள் மகாசிவராத்திரி வைபவத்தை வெகுசிறப்பாகப் பேசுகின்றன. மாஸ பூஜாவிதியின் நடுவே மகாசிவராத்திரி பற்றிக் குறிப்பிட்டு அவ்விரதத்தை எவ்வாறு அனுசரிக்க வேண்டும்? நான்கு கால பூஜைகள் எப்படிச் செய்ய வேண்டும் என விளக்கமாக ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் யாமத்திற்கு பஞ்சகவ்யத்தால் அபிடேகித்து சதகலச ஸ்நனம் (108 கலச அபிடேகம்) , வில்வார்ச்சனை, பயற்றன்ன நெய்வேதனமும் இரண்டாம் யாமத்துக்கு பஞ்சாமிருதத்தால் அபிடேகித்து நாற்பத்தொன்பது (49) கலச அபிடேகம், தாமரைபூ
அர்ச்சனை, பாயசான்ன நெய்வேதனமும், மூன்றாம் யாமத்திற்கு தேனால் அபிடேகித்து இருபத்தைந்து (25) கலச அபிடேகம், ஜாதிபூ அர்ச்சனை, எள்ளுச்சாத நெய்வேதனமும் நான்காம் யாமத்திற்கு கருப்பஞ்சாற்றால் அபிடேகித்து பதினாறு (16) கலச ஸ்நபனமும், நந்தியாவர்த்தம்பூ அர்ச்சனையும் சுத்தான்ன நெய்வேதனமும் சிறப்பு என ஆகமங்கள் பரிந்துரைக்கின்றன.
அவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் முறையே சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை ஆடைகளை சிவலிங்கப்பெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்யுமாறு உத்தரகாரணாகமம் பரிந்துரைக்கின்றது.
இவ்வாறான ஒழுங்கை சிறப்பாகச் சொன்ன ஆகமங்கள் கட்டாயமாக இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை என்பதையும் அன்பர்கள் தங்கள்
வசதிக்கு ஏற்ப பக்திபூர்வமாக இறைவனை வழிபட ஆகமம் அனுமதிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வழிபாட்டால் செல்வம் முதலிய இகசுகங்களும் நிறைவில் சிவப்பேறும் சித்திக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
2019 மகா சிவராத்திரியின் சிறப்பு
ஆண்டு தோறும் சிவராத்திரி வருகின்றதே ஆயினும், இந்த விளம்பி வருடம் (2019)ல் வரும் சிவராத்திரி மிகச்சிறப்பானதாக கருதப்படுகின்றது.
முக்கியமாக,
1. சாந்திரமான, சௌரமான இரண்டு கணிப்பு மூலமும் ஒரே நாளிலேயே மகாசிவராத்திரி கொண்டாடப்படுகின்றது.
2. திரயோதசித்திதி அம்பாளுக்கு உகந்தது. சதுர்த்தசித்திதி
சிவபெருமானுக்கு உகந்தது. இவ்விரு திதிகளும் ஒன்றாக இணைய வேண்டும்.ஆயினும் இவ்வாறு இணையும் சிவராத்திரிகள் அவ்வப்போதே அமையும். இவ்வாண்டு
இதனை கண்டு மகிழலாம்.
3. சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை இருப்பின் பாரணை செய்வது கடினமாகும். இவ்வாண்டு அவ்வாறு மறுநாள் அமாவாசை இல்லை. எனவே, அனைவரும் முறைப்படி அதிகாலையில் பாரணை உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
4. சிவபெருமானுக்கு உகந்த வாரம் திங்கட்கிழமையாகிய சோமவாரம். இவ்வாண்டு சோமவாரத்தன்று மகாசிவராத்திரி வருகின்றது.
இத்தகு உத்தமோத்தம சிவராத்திரியை அனுசரிப்பது மூன்று கோடி சிவராத்திரியை அனுசரிக்கும் புண்ணியம் தரும் என்று ஸ்ரீமத் உத்தர காரணாகமம் என்ற சிவாகமம் பேசுகின்றது.
தியாக. மயூரகிரிக்குருக்கள்,
பிரதம ஆசிரியர்,
இந்துசாதனம் (Hindu organ)
COMMENTS