“சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்.
“யாவர்க்கும் தந்தையாய் எனுமிவரிப் படியளித்தார்
ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராம் அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்
தாவில் தனிச்சிவ ஞானசம்பந்தர் ஆயினார்”
என்று சேக்கிழார் இச்சிறப்பை பெரியபுராணத்தில் பாடுகிறார். ஏராளமான தமிழ்ப்பாக்களைப் பாடி அனேக அற்புதங்களைச் செய்த ஞானசம்பந்தர் திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகனை உயிர்ப்பித்ததும் மதுரையில் பாண்டியன் வெப்பு நோய் நீக்கி அன்பு நெறி வளரச் செய்ததும் மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பலை தன் தமிழிசையால் உயிரளித்ததும் வியக்கத்தக்கன. நிறைவில் தான் மட்டுமன்றி தன்னைச் சார்ந்தோர் யாவருக்கும் ஜோதியுள் கலக்கும் பேறளித்தவர் இப்பெருமானார்.
மூன்றாவது வயதிலேயே தனக்கு பால் தந்தவர் யாரென்று வானத்தை நோக்கிக் கை காட்டி, தான் கண்ட இறை காட்சியைத் தன் தந்தையாருக்கும் காட்டியவர் ஞானசம்பந்தர். ஆக இவர் நமக்கு இறைவனைக் காட்டித் தரவல்லவர். இறைவனுடன் இணைக்க வல்லவர். நம்மைப் பற்றி இறைவனிடம் பரிந்துரை செய்ய வல்ல புனிதர்.
அறுபத்துமூன்று நாயன்மார்களின் புனித வரலாற்றினைக் கூறும் பெரியபுராணம் என்னும் மாபெரும் காப்பியத்தில் செம்பாதி “ஆளுடைய பிள்ளை” என்று வழங்கப் பெறும் திருஞானசம்பந்தப் பெருமானது சரிதம் தான். அது பற்றியே ’பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற வழக்கு ஏற்பட்டது.
நாமும் வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூத பரம்பரை பொலிய தோன்றிய புனித ஞானசம்பந்தர் பாதம் பணிந்து குருவருள் பெறுவோம்...
COMMENTS