யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணை நீராவியடியில் கடைச்சாமி வீதியில் கடையிற்சுவாமிகளின் சமாதிச் சிவாலயத்திற்குத் தென்புறமாக கடையிற்சுவாமிகளால் இது சிதம்பரமடம் என விளிக்கப்பட்ட பிரதேசத்திலே ஸ்ரீ நடேசப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் பேரம்பலச்செட்டியாரின் பரம்பரையினரால் அமைக்கப்பெற்று
நிர்வகிக்கப்படும் இக்கோவிலின் மூலவராக நடராஜப்பெருமான்
தென்திசை நோக்கியபடி சிவகாம சுந்தரியுடன் எழுந்தருளியூள்ளார். இவருடன் தாம் ரவிக்ரகங்களாக அமைந்த ஸ்ரீவித்யா கணபதி, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் நால்வர் முதலிய பரிவார மூர்த்திகளும் முன்புறம் நந்தி பலிபீடமும் அமைந்துள்ளன.
தினமும் இருகாலப்பூஜைகளும் பிரதோஷவிரத, சிவராத்திரி,
சோமவார, திருவெம்பாவை காலங்களில் விசேஷ பூஜைகளும் நிகழும். வாக்கிய பஞ்சாங்கத்தைப் பின்பற்றி நடராஜப்பெருமானுக்குரிய ஆறு
நடசேரபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுவதுடன் ஆவணி
நடேசரபிஷேகம் மகாகும்பாபிஷேக தினமாக அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் அமைப்புமுறை தத்துவார்த்தச் சிறப்புக்கள்
பலவற்றைக் கொண்டது. கனக சபையாக அமைந்த கர்ப்பக்ரக
ஸ்தூபியில் ஆகாசலிங்கமாக உள்ள விமானத்தைச் சூழ நான்கு திசையிலும் ப்ருதி அப்பு தேஜோ வாயு லிங்கங்கள்
அமைந்துள்ளன. ஸ்தூபின் உட்புறத்தில் குறுகிச் செல்லும் 27 படிக்கட்டுகளும் 27 நட்சத்திரங்களைக் குறிப்பன.
கர்ப்பக்கிரக கதவில் அமைந்திருக்கும் 28 மணிகளும் 28 ஆகமங்களைக் குறிப்பன. வாயிலில் அமைந்திருக்கும் 5 படிகள்
பஞ்சாட்சரப்படிகள் என அழைக்கப்படுகின்றன. சித்ரசபையாக அமைந்த அர்த்த மண்டபத்தின் நான்கு தூண்களும் நால்
வேதங்களைக் குறிப்பன. தாமிர சபையாக விளங்கும் மகாமண்டபத்தின் ஆறு பெரும் தூண்களும் கலாத்வா முதலிய ஆறு
அத்வாக்களைக் குறிப்பன.
இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த இவ்வாலயத்தின் பூஜைகளும் அனைத்துக் கிரியைகளும் நல்லூர் நியாய சிரோமணி
பிரம்மஸ்ரீ. கி. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் நெறிப்படுத்தலில் அவரது பரம்பரையினரால் இன்றுவரை செவ்வனே
பின்பற்றப்பட்டுவருகின்றன.
பிரம்மஸ்ரீ.சு. நவநீதக்கிருஷ்ணன்
சிரேஷ்ட உதவி நூலகர்,
யாழ் பல்கலைக்கழகம்.
COMMENTS