காலத்திலிருந்தே சைவசமயத்தையே தம் சமயமாகக்
கொண்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் தனிச்சிறப்பு வாய்ந்த
ஊர். வரலாற்றுப் புகழ்மிக்க வளம் நிறைந்த இப்பேரூரில்
அடியார் இடர் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானுக்கு
அழகிய ஒரு திருக்கோவில் பல நூறு ஆண்டுகளாகவே
இருந்து வருகின்றது. இணுவில் கந்தசாமி கோவில் என்ற
உடனேயே அங்குள்ள “உலகப் பெருமஞ்சமும் அதிலே
ஆறுமுகப் பெருமான் அமர்ந்திருந்து அருளாட்சி செய்யூம் கோலமும்
அடியார்களின் நினைவில் தோன்றி ஆனந்த பரவசத்தில் அவர்களை
ஆழ்த்தும். இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த திருமஞ்சம் உருவான வரலாற்றை இன்றைய சமுதாயத்தினர், குறிப்பாக இளைய பரம்பரையினர் அறிந்து வைத்திருப்பது அவசியம். “எல்லாம் அவன் செயல் ” என்பதற்குக் கண்கண்ட உதாரணமாகக் கவின்பெற விளங்குகின்றது இந்தக் கலைப்பொக்கிஷம்.
ஈழத்துச் சித்தர்களின் இடையறாப் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக
இரண்டு நூற்றாண்டுகளின் முன்னர் உதித்தவர் பெரிய
சன்னியாசியார். இணுவில் வீதிகளில் ஓங்கி வளர்ந்திருந்த
மரங்களின் நிழலில் தியானம் செய்வதும் காடுடைய
சுடலையிலே தனித்திருப்பதும் தன்னை நாடி வருவோரின்
தீராத நோய்களைத் தீர்ப்பதும் தன் விழி நோக்கால்
பிறர் கண்ணீர் துடைப்பதும் இவருடைய வாழ்க்கைச்
சிறப்பாக அமைந்தன. இடுப்பிலே சிறிய துண்டும் உடம்பு
முழுவதும் திருநீறும் தரித்து ஊரில் உலாவிய இவர்
செய்த அற்புதங்கள் அனந்தம். இப்பெருந்தகையின்
கனவிலே “என்னைத் திருமஞ்சத்தில் இருத்தி வீதியூலாக்
கொண்டு வா” என முருகப் பெருமான் கேட்டுக்கொண்டதன்
விளைவே இங்குள்ள உலகப் பெருமஞ்சமாகும். கையிற்
பிரம்போடு மண்ணிற் கூத்தாடிக்கொண்டு நின்ற சித்தர்
சுவாமிகள் “மரங்களைக் கொண்டு வந்து குவியூங்கள்”
என மக்களிடம் கூறினார்.
இணுவில் கிழக்கில் “மஞ்சத்தடி” என இப்போது சொல்லப்படும் இடத்தில் மரங்களை மலைபோலக்குவித்தனர். பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் கன்னியாசியாரின் கையிலே காசு ஒரு சதமும் இல்லை. என்றாலும் “முருகன் மஞ்சத்தில் வரப் போறான்”
எனத் தினமும் உச்சரித்த வண்ணம் வீதிகளில் உலாவினார். ஒருநாள் அங்கிருந்து திடீரென்று பருத்தித்துறைக் கடற்கரையை நோக்கிச் சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். “குடும்பிக்காரன் வருவான் வருவான் எனக் கூறினாயே, எங்கே?” என ஏசிக்கொண்டும், ஆடிப்பாடி உறங்கிக்கொண்டும் சில நாள்களைக் கழித்த அவர் குடும்பிக் கடுக்கனுடன் சிற்பக் கலைஞர்கள் பலர் கட்டு மரங்களில் வந்து இறங்கியதைக் கண்டார். ஆனந்தமடைந்த சன்னியாசியார்,அவர்களை இணுவிலுக்கு அழைத்து வந்தார். வெறும் தரையிலே மஞ்சம் ஒன்றை வரைந்து, அதை மரத்தால் உருவாக்குமாறு கட்டளையிட்டார். இந்த அரும்பெரும் பணியில் ஆண்டுக்கணக்காக அந்தக் கலைஞர்கள் ஈடுபட்டனர்.
கந்தபுராணத்திற் காணப்படும் சம்பவங்கள், பல்வேறு ஆன்மீக வரலாறுகள், தாயின் கருவறையில் மழலை தோன்றுவது, பிறப்பது, தவழ்வது, நடப்பது என மனித வாழ்க்கையின் ஒவ்வொரு
படிநலைகள். நாம் இதுவரை கண்ணாற் காணாதவையுட்படப் பல்வேறு பறவைகள், கோபம் கொண்ட குதிரையொன்று
தன் கால்களை உயர்த்தி ஒருவரை அடக்கும் காட்சி போன்ற எல்லாமே கலையழகுடனும் உயிர்த்துடிப்புடனும் பார்த்து இரசித்து மகிழக்கூடிய முறையிலே சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
51 அடி உயரமுடைய இந்த மஞ்சத்தின் மேற்பகுதி சற்று ஆடி அசையக்கூடிய வகையில் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட, வசதிகள் குறைந்த ஒரு கட்டத்தில் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பது ஓர் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். பெரிய சன்னியாசியாரையும் சிற்பக் கலைஞர்களையும் முருகன் திருவருள் முன் நின்று நடத்தியிராவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது என்பது நிச்சயம்.
ஈழத்திலே பெரிய சித்திரத்தேர்கள் உருவாவதற்கு பல ஆண்டுகள் முன்னரே இத்திருமஞ்சம் உருவாக்கப்பட்டமை குறிக்கத்தக்கது. இணுவில் கிழக்கில் உருவாக்கப்பட்ட இம்மஞ்சத்தை இணுவில் மேற்கிலுள்ள கந்தசாமி கோயிலுக்குக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட அகலப் பாதை இப்போதும் கண்ணாரக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மஞ்சத்திருவிழா ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று இரவு வேளையில் நடைபெற்று வந்துள்ளது. வருடாந்த மகோற்சவ காலத்திலும் ஒருநாள் முருகப்பெருமான் மஞ்சத்தில் பவனி வருவது வழக்கம். இவ்விழாக்களுக்கும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் குடும்பம் குடும்பமாக வண்டியில் வந்து இருநாள் தங்கி,பொங்கிப் படைத்து வழிபாடு செய்ததாக இங்குள்ள மூத்தோர் சொல்லி
மகிழ்வர். அவர்கள் தங்குவதற்குக் கோவிற் சூழலில் மடங்களும் நீராடுவதற்குக் கேணிகளும் இருந்தனவாம். அரைநூற்றாண்டின் முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த எலிசபெத் மஹாராணியின் யாழ்ப்பாண நிகழ்ச்சிகளில் இந்த மஞ்சத்தைப் பார்வையிடுவதும் ஒன்றாக இருந்தது. அவ்வேளையில் மஞ்சம் ஓட முடியாத நிலையில் அச்சு முறிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ மஞ்சத்தில் இருந்த சில பாவைகளையும் பறவைகளையும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்றார் என இணுவிலில் வாழ்ந்த பெரும் கல்விமான் சபா.ஆனந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இலண்டனிலுள்ள நூதன சாலையிற் பல மரச்சிற்பங்கள்,
திருவாசிகள், நடராஜ வடிவங்கள் காணப்படுகின்றன. அவை
தென்கிழக்காசியாவிற் பெறப்பட்டவை எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், மரச்சிற்பங்கள் பல இங்கிருந்து
எடுத்துச்செல்லப்பட்டவையே. இணுவிலைச் சேர்ந்த பொறியியலாளர் திரு.சோமசுந்தரம் கனகசுந்தரம் இவை சம்பந்தமாக ஆராய்ந்துள்ளார். ஓட முடியாத நிலையிற் பல ஆண்டுகள் இருந்த இந்த மஞ்சத்திற்கு லண்டனிலிருந்து அச்சு எடுப்பித்துப் பொருத்தி, மீண்டும் அதை ஓட வைத்த பெருமைக்குரியவர் இணுவில் தனவந்தர் அமரர் கல்கி சின்னத்துரை. 1978 ஆம் ஆண்டில் சில அன்பர்கள் சேர்ந்து மஞ்சத்தைப் புனர்நிர்மாணஞ் செய்து, அதற்கென நிரந்தர இருப்பிடத்தையும் உருவாக்கியுள்ளனர்.
- கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் -
COMMENTS